RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

'செவிடன் காதில் ஊதிய சங்கு'- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெ கண்டனம்!

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 11:32 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த கண்டனங்களை புறக்கணித்து, ‘செவிடன் காதில் ஊதிய சங்கு' என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு நடந்து கொள்ளுமேயானால், தங்களின் மனக் கொதிப்பினையும், உள்ளக்குமுறல்களையும் மக்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள், என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மத்திய அரசின் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து இன்று முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

‘விஷம் போல் ஏறும் விலைவாசி', ‘வரலாறு காணாத பணவீக்கம்' ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதைத் தலையாய பணியாகக் கொண்டிருக்க வேண்டிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அதற்கு முற்றிலும் முரணான வகையில், விலைவாசியை உயர்த்த வழிவகுக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டே செல்வது ‘வேலியே பயிரை மேய்வது' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தியிருக்கிறது. இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும். சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த மத்திய அரசும் செய்திராத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்விற்கு வழிவகுத்த ‘பெருமை' ஒன்பதரை ஆண்டு கால மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே சாரும்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவியர்; அலுவலகங்களுக்குச் செல்வோர்; சுற்றுலாப் பயணிகள்; இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்தினர் ஆகியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதுதவிர, சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த இந்த டீசல் விலை உயர்வு வழி வகுக்கும்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, குறைந்த கட்டணத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிப்பற்றாக்குறையினை சந்திக்க நேரிடும்.

மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற திடமான முடிவுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

வெளிநாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி உள்நாட்டிலேயே கிடைக்கின்ற எண்ணெய்க்கும் அதே விலை நிர்ணயம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்திய நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கெனவே பல முறை சுட்டிக் காட்டியபடி பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதன் மூலம் அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை என்ற அளவுக்கு பெட்ரோலியப்பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்துவது என்பது பொருளாதார மேம்பாட்டை சீரழிக்கின்ற ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே பல்வேறு சோதனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக, இந்த விலை உயர்வையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரத்தையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

‘செவிடன் காதில் ஊதிய சங்கு' என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு நடந்து கொள்ளுமேயானால், தங்களின் மனக் கொதிப்பினையும், உள்ளக்குமுறல்களையும் மக்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT