RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

உழுதவன் கணக்கு!

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 8:56 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பார்கள். உண்மையில் எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. பச்சை நெல்லின் பால் வாசம் வீசும் மார்கழிப் பனியில், வரப்பில் நடந்தபடியே தன் குழந்தைகளைப் போல பயிர்களை நேசிக்கும் விவசாயி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் பார்ப்பான். யூரியா, டி.ஏ.பி., விலையைப் பார்ப்பான். ஒருபோதும் வரவு-செலவு கணக்குப் பார்ப்பது இல்லை.

உழுதவன் கணக்கு! P94e

உழுவதும் உழைப்பதும் தனது பிறவிப் பெருங்கடன் என்று எண்ணியே காலம் எல்லாம் சேற்றில் நிற்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அது பார்க்கப்பட வேண்டிய கணக்கு. 'விவசாயிகளின் நிலை பரிதாபம்’ என்று அனுதாபப்படுவது இருக்கட்டும். அந்த அவலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது, மும்பை பங்குச் சந்தையின் வணிகக் கணக்கு அல்ல; வங்கி அரை வருடக் கணக்கு முடிவும் அல்ல. நம் ஊருக்கும் உலகுக்கும் சோறு போடும் உழவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரம்!

தஞ்சாவூருக்கு அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, குமார். இவர் இப்போதுதான் அறுவடையை முடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவானது என்று குமார் சொல்லும் வரவு-செலவுக் கணக்கு இதோ...

ஒரு ஏக்கருக்கான உழவுக் கணக்கு

வெறும் நிலத்தில் எரு அடிக்க வேண்டும். முன்பு ஒவ்வோரு வீட்டிலும் மாடுகள் இருக்கும். எருவும் வீட்டிலேயே இருக்கும். அதை வண்டி வைத்துக்கொண்டு சேர்க்கும் செலவு மட்டும்தான். இப்போது மாடுகள் இல்லை என்பதால், எருவை, காசு கொடுத்து வாங்க வேண்டும் அல்லது ஆட்டுக்கிடை வைக்க வேண்டும். இந்த வகையில் ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 1,500 ரூபாய்.

ஒரு ஏக்கருக்கு நடவு நட, நாற்றங்கால் அமைக்க வேண்டும். டிராக்டர் வாடகை, 350 ரூபாய். ஒரு கூலி ஆள் வேண்டும். அவருக்கு சம்பளம் 350 ரூபாய். இந்த வகையில் மொத்தம் 700 ரூபாய்.

விதை நெல் 30 கிலோ பை - 1,100 ரூபாய். தஞ்சை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் 39, 38 ஆகிய ரக நெல்களின் விலை இது. ஒருவேளை ஆந்திரா பொன்னி என்றால் 1,400 ரூபாய் வரும். ஆந்திரா பொன்னி ஒருசிலர்தான் பயிரிடுவார்கள் என்பதால், முந்தையதையே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். விதை நெல் வகையில் ஒரு ஏக்கருக்கு 1,100 ரூபாய் செலவு.

நாற்றுப் பறிக்க, 30 கிலோ நெல்லுக்கு 1,500 ரூபாய்.

நடவு நட, சேறு அடிக்க வேண்டும். டிராக்டர் செலவு, 2,000 ரூபாய்.

வரப்பு வெட்ட, ஓர் ஆளுக்கு 350 ரூபாய். ஒரு ஏக்கருக்கு, குறைந்தது மூன்று ஆட்கள் வேண்டும். அதற்கு, 1,050 ரூபாய்.

நடவு நட, ஒரு ஏக்கருக்கு 18 ஆட்கள் தேவை. ஓர் ஆளுக்கு இப்போது 100 ரூபாய் கூலி. மொத்தம் 1,800 ரூபாய்.

நடவு நடும்போது நாற்றுக் கட்டுகளைத் தூக்கிப் போட, பட்டம் பிடிக்க... என்று ஒரு ஏக்கருக்கு மூன்று ஆட்களின் வேலை இருக்கும். ஓர் ஆளுக்கு 350 ரூபாய் வீதம், மொத்தம் 1,050 ரூபாய்.

நடவு நடும் பெண்கள் மற்றும் நடவு வயலில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு டீ, பலகாரம் வாங்கித் தர வேண்டும். இந்த வகையில் செலவு, சுமார் 1,000 ரூபாய்.

களை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு களை எடுக்க, குறைந்தது 20 பேர் தேவை. ஓர் ஆளுக்குச் சம்பளம், 100 ரூபாய். மொத்தச் செலவு, 2,000 ரூபாய்.

நெல் அறுவடையை முன்பு ஆட்கள்தான் செய்தார்கள். இப்போது கடுமையான ஆள் பற்றாக்குறை என்பதால், இயந்திரம்தான் அறுவடைக்கு ஒரே வழி. தவிரவும் இது ஒரு ஏக்கர் அறுவடையை ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுகிறது. நேரடியாக அறுவடை வயலில் இறங்கும் இயந்திரம் ஒரு பக்கம் அறுத்துக்கொண்டே வர, மறுபக்கம் நெல் தனியாகக் கொட்டிவிடுகிறது. இந்த வகையில் ஒரு ஏக்கர் நெல்லை அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்துக்கான இயந்திரக் கூலி 2,300 ரூபாய்.  

அறுத்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல ஆகும் டிப்பர் வாடகை, 800 ரூபாய்.

பெரும்பாலான விவசாயிகள், நடவு நடும்போது டி.ஏ.பி., அடி உரம் போடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி., தேவை. விலை 1,400 ரூபாய். நடவுக்குப் பின்னர், இரு முறை யூரியா அடிக்க வேண்டும். முதல் முறை 300 ரூபாயும், இரண்டாம் முறை 550 ரூபாயும் செலவாகும். உர வகைகளில், மொத்தம் 2,250 ரூபாய்.

நெற்பயிரில் கதிர் வரும்போது, நன்றாகக் கதிர் பிடிப்பதற்காக மருந்து அடிப்பார்கள். ஒரு ஏக்கருக்கு அடிப்பதற்கான இந்த மருந்தின் விலை 800 ரூபாய்.

இரண்டு முறை பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கும். ஒரு முறைக்கு 400 ரூபாய் வீதம், மொத்தம் 800 ரூபாய்.

அடி உரம் அடிப்பதில் தொடங்கி, யூரியா, டி.ஏ.பி., பூச்சி மருந்து தெளிப்பது வரை அனைத்தையும் செய்ய கூலி ஆட்கள் தேவை. ஆறு பேர் கூலி என்று கணக்கிட்டால், மொத்தம் 2,100 ரூபாய்.

அறுவடை முடிந்து நெல் விற்கப் போகும்போது, கூலி ஆட்கள் தேவை. 30 மூட்டை போட வேண்டும் என்றால்கூட, மூன்று ஆட்களின் வேலை இருக்கும். இந்த வகையில் செலவு, 1,050 ரூபாய்.

நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ கொண்ட ஒரு பைக்கு 20 ரூபாய் கமிஷன் (அதாவது லஞ்சம்) கட்டாயம். சில இடங்களில் இது 15 ரூபாயாகவும், சில இடங்களில் 25 ரூபாயாகவும் உள்ளது. 20 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லுக்கு சுமார் 800 ரூபாய் கமிஷன்.

மேலே உள்ளவற்றை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், 24,600 ரூபாய் வருகிறது. இது செலவு. இனி, வரவுக் கணக்கைப் பார்ப்போம்.

உழுதவன் கணக்கு! P94

தற்போதைய நிலையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, 850 ரூபாய். ஒரு ஏக்கருக்கு சுமார் 36 மூட்டை என்பது அதிகபட்ச விளைச்சல். பெரும்பாலும் 30 மூட்டைகள் தான் விளைகின்றன என்றபோதிலும் நாம் 36 மூட்டைகள் என்றே எடுத்துக்கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், மொத்தம் 30,600 ரூபாய் வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 6,000 ரூபாய் லாபம். அதாவது 24,000 ரூபாய் முதலீடு செய்து, ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்தால் கிடைக்கும் லாபம் வெறும் 6,000 ரூபாய். இதை ஐந்து மாதங்களுக்கான சம்பளமாகக் கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 1,200 ரூபாய். நாள் கூலியாகக் கணக்கிட்டால், தினம் 40 ரூபாய். மத்திய அரசின் திட்டக்குழு அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 28 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்கள் ஏழை இல்லை. எனில், நம் விவசாயிகள் ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பாதிப்பதால், அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்ற அரிய உண்மையை நாம் இதன் மூலம் தெரிந்துகொள்கிறோம்.

இந்த வரவு-செலவுக் கணக்கு மிகவும் பெருந்தன்மையானது என்பதால்தான், மேற்கண்ட 6,000 ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது. அது என்ன பெருந்தன்மை? விவசாய வேலைகளைப் பொறுத்தவரை நாற்றங்கால் சேறு அடிப்பதில் தொடங்கி, அறுவடை முடியும் வரை குடும்பத்து ஆட்கள் அத்தனை பேருமே வெவ்வேறு வகைகளில் வேலைபார்க்க வேண்டியிருக்கும். அவர்களுக்கான கூலி எதுவும் இங்கு கணக்கிடப்படவில்லை. ஏனெனில், அதை வெறுமனே 'வேலை’ என்று கருத முடியாது. பயிர், பருவம் பிடிக்கும் நாளில், வீட்டுக்கூடத்தில் அமர்ந்து சோற்றில் கை வைக்கும்போது, தாழ்வாரத்தில் ஒரு சொட்டு மழைநீர் விழுந்தால், அவன் ஈரக்குலை நடுங்கும். ஏனெனில், பால் வைக்கும் பருவத்தில் மழை பெய்தால், அனைத்தும் பாழ். எல்லாம் கருக்காயாகப் போய்விடும். செய்த செலவும் இட்ட உழைப்பும் வீண். நாள் தவறாமல் வயலுக்குச் சென்று நீர் பாய்ச்சவும் வடியவைக்கவும் வேண்டும். இதற்கு என்ன கூலி நிர்ணயிப்பது?

காவிரி நீர், பல வருடங்கள் வருவது இல்லை என்பது நமக்குத் தெரியும். அப்போதெல்லாம் விவசாயிகள் போர்வெல் வைத்திருப்பவர்களிடம் காசுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய். சில ஊர்களில் இது நெல்லாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு பருவம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம். அறுவடைக்குப் பின்னர் ஒரு ஏக்கருக்கு ஆறு மூட்டைகள் நெல் கொடுத்துவிட வேண்டும்.

நெற்பயிர் நேராக இருந்தால்தான், அறுவடை இயந்திரம் விறுவிறுவென அறுக்கும். ஒருவேளை காற்றடித்து பயிர்கள் வயலில் சாய்ந்துகிடந்தால், அறுக்க நேரமாகும். ஒரு ஏக்கர் அறுக்க வழக்கமாக ஒரு மணி நேரம் என்றால், பயிர் சாய்ந்திருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். அது அறுவடைச் செலவில், இன்னும் 1,000 ரூபாயை அதிகரிக்கும்.

இவற்றையும் செலவில் சேர்த்தால், ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு விவசாயி, தன் கையில் இருந்து 5,000 ரூபாய் செலவழிக்கிறார் என்பதே உண்மை. இவ்வளவு இடர் நிறைந்த, லாபமற்ற தொழிலை எப்படி விவசாயிகள் இடைவிடாமல் செய்து வருகின்றனர்? தஞ்சாவூர் விவசாயி ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார்...

''ஒரு வெள்ளாமைக்காரன் நிலத்தைச் சும்மாப் போட்டிருந்தா, ஊர்ல அப்புறம் நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். ஒரு நல்ல நாள்ல நாலு வீட்டுப் பொங்கப் பானையில அள்ளிப்போட, என் வயல்ல வெளஞ்ச அரிசி வேணும்ல தம்பி!''



Message reputation : 100% (1 vote)

« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT