RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

வரலாறு படைத்தது காஷ்மீர் அணி :ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு தகுதி

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 3:01 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
வல்சாத்: ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு முதன்முறையாக முன்னேறிய காஷ்மீர் அணி புதிய வரலாறு படைத்தது.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தன.

அகர்தலாவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் திரிபுரா, காஷ்மீர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் திரிபுரா 280, காஷ்மீர் 325 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் திரிபுரா அணி 272 ரன்கள் எடுத்தது. பின், 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய காஷ்மீர் அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இப்போட்டி ‘டிரா’ என அறிவிக்கப்பட்டது.

புதிய வரலாறு:

‘சி’ பிரிவு லீக் சுற்றின் முடிவில், 8 போட்டியில் 4 வெற்றி, 4 ‘டிரா’ உட்பட 35 புள்ளிகள் பெற்ற மகாராஷ்டிரா அணி காலிறுதிக்கு முன்னேறியது. தலா 28 புள்ளிகளுடன் காஷ்மீர் (1.006 ரன்–ரேட்), கோவா (1.005 ரன்–ரேட்) அணிகள் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டன. இதில் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் 0.001 புள்ளிகள் கூடுதலாக பெற்ற காஷ்மீர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது. முன்னதாக 2000–01 சீசனில் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறிய காஷ்மீர் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை சென்றது. இதில் ஒடிசா அணியிடம் 420 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது. வரும் ஜன., 8ம் தேதி வதோதராவில் துவங்கவுள்ள காலிறுதியில் காஷ்மீர் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை முன்னேற்றம்:

குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், குஜராத், மும்பை அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 154, குஜராத் 253 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 273 ரன்கள் எடுத்தன. பின், 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய குஜராத் அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அக்ஷார் படேல் (65) ஆறுதல் தந்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 147 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. மும்பை சார்பில் இக்பால் அப்துல்லா 5, விஷால் தபோல்கார் 4, சூர்யகுமார் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், ‘ஏ’ பிரிவில் விளையாடிய 8 லீக் போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வி, 3 ‘டிரா’ உட்பட 29 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த மும்பை அணி காலிறுதிக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களை பிடித்த கர்நாடகா (38 புள்ளி), பஞ்சாப் (30) அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

டில்லி தோல்வி:

டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் டில்லி, கர்நாடகா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் டில்லி 202, கர்நாடகா 289 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் டில்லி அணி 201 ரன்கள் எடுத்தது. பின், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு களமிறங்கிய கர்நாடகா அணி, 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.

காலிறுதியில் யார்

லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், வரும் ஜன., 8–12ம் தேதிகளில் கோல்கட்டா, மும்பை, பெங்களூரு, வதோதராவில் காலிறுதிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் கோல்கட்டாவில் நடக்கவுள்ள காலிறுதியில், பெங்கால், ரயில்வேஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் கர்நாடகா, உத்தர பிரதேச அணிகளும், மும்பையில் மும்பை, மகாராஷ்டிரா அணிகளும், வதோதராவில் பஞ்சாப், ஜம்மு–காஷ்மீர் அணிகளும் மோதுகின்றன.

ரசூல் மகிழ்ச்சி

இதுகுறித்து காஷ்மீர் அணி கேப்டன் பர்வேஸ் ரசூல் கூறுகையில், ‘‘காஷ்மீர் அணி முதன்முறையாக ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது குறித்து விவரிக்க வார்த்தைகளே கிடையாது. இதன்மூலம் அடுத்த ஆண்டு ‘பி’ பிரிவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது எங்கள் கவனம் முழுவதும் பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி்ப் போட்டி மீது மட்டும் உள்ளது. பஞ்சாப் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் அந்த அணியில் சர்வதேச போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளனர். இருப்பினும் முழுத்திறமையை வௌிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற முயற்சிப்போம்,’’ என்றார்.

முதல்வர் வாழ்த்து

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்த காஷ்மீர் அணி வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். காலிறுதியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்,’’ என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT