RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ எனப் பேச வேண்டாம்... ராமதாசுக்கு நத்தம் விசுவநாதன் கண்டனம்

From: 'விஸ்தாரம்'

POST 117/6/2014, 5:53 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார் தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாமக நிறுவனர் ராம்தாசு மின் திட்டங்கள் குறித்து பத்து கேள்விகளை அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார். தற்போது அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார். அதில் ராமதாசின் இந்தக் கேள்விகள் ஆதாயம் தேடும் முயற்சி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"மகன் நலம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு, "மக்கள் நலம்" ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாவிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.

இருப்பினும், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் அம்மா எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.

எண்ணூர் அனல்மின் திட்ட விரிவாக்க திட்டம்:

முதலாவதாக, 660 மெகா வாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக டாக்டர் ராமதாசு தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல் கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.

பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. தற்போது கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் எவ்விதத் தாமதமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



POST 217/6/2014, 5:55 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம்:

இரண்டாவதாக, 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் இதுவரை ஏன் வழங்கப்பட வில்லை என்று வினவியிருக்கிறார் டாக்டர் ராமதாசு. இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 07.01.2014 அன்று தான் வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு பல மாதங்களுக்கு முன்னரே மேற்கண்ட திட்டத்திற்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அந்த ஒப்பந்தப் புள்ளிகள் 26.07.2013 அன்றே திறக்கப்பட்டன. ,

இதனைத் தொடர்ந்து, இதற்கான விலை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அவை 5.2.2014 அன்று திறக்கப்பட்டன. இடையில் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததன் காரணமாக மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, இதற்கான பணி ஆணை விரைவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே, ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான விவரங்கள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவதே சரியான முறையாக இருந்தாலும், மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், மிகுந்த மதி நுட்பத்துடன், அசாதாரணமாக சிந்தித்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னரே ஒப்பந்தப் புள்ளிகள் கோர முதல்-அமைச்சர் அம்மா ஆணையிட்டதால் தான், விரைவாக பணி ஒப்பந்தம் இறுதி செய்திடும் நிலையை இந்தத் திட்டத்தில் எட்டியிருக்கிறோம் என்பதை ராமதாசுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

1,320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டத்தைப் பொறுத்த வரையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 14.10.2013 அன்று தான் கிடைத்தது. இருப்பினும், இதற்கு முன்னரே மேற்கண்ட திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, நான்கு நிறுவனங்கள் அளித்த தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப்புள்ளிகள் 19.07.2013 அன்று திறக்கப்பட்டு தமிழ்நாடு மின் வாரியத்தின் பரிசீலைனையில் உள்ளது. விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம்:

மூன்றாவதாக, 660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்ததை தவிர வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று தெரிவித்து இருக்கிறார் டாக்டர் ராமதாசு அவர்கள். உண்மை நிலை என்னவென்றால், இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்வதற்காக குறிப்பு விதிமுறைகளை இறுதி செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 09.01.2014 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டவுடன் இத்திட்டத்திற்கான ஆய்வுகள் தொடங்கப்படும் என்பதையும், மத்திய அரசின் குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்படாமல், எந்த ஆய்வுப் பணியையும் துவக்க முடியாது என்பதையும் டாக்டர் ராமதாசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



POST 317/6/2014, 5:57 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
என்.எல்.சி திட்டப்பணி:

நான்காவதாக, மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து 1,000 மெகாவாட் அனல் மின் திட்டப் பணி ஏன் இன்னும் முடியவில்லை என்று வினா எழுப்பியிருக்கிறார் மருத்துவர் ராமதாசு. கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின்படி, இத்திட்டத்திற்கான பணிகளை மத்திய அரசின் நிறுவனமான என்.எல்.சி. நிறுவனம் மேற்கொண்டு வந்தாலும், இதற்கான பணிகளை என்.எல்.சி. நிறுவனம் மத்திய அரசின் நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்திற்கு வழங்கி, இரண்டு மத்திய அரசு நிறுவனங்களும் இணைந்து இந்த அனல் மின் திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், இதற்கான பணிகளை விரைந்து முடிக்க அம்மாவின் தலைமையிலான அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் இங்கு மின் உற்பத்தி துவக்கப்படும்.

உப்பூர் மின் திட்டப்பணி:

ஐந்தாவதாக, 1,600 மெகாவாட் மின் திறன் கொண்ட உப்பூர் மின் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஏன் இன்னும் கோரப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் இராமதாசு. இந்தத் திட்டத்திற்கான குறிப்பு விதிமுறைகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 28.05.2012 அன்று பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி 22.11.2012 அன்று பெறப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, பகவதி அனாலாப்ஸ், ஐதராபாத் என்ற நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு அக்டோபர் 2013-ல் இறுதி செய்யப்பட்டது.

விரிவான கடல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வாப்காஸ் என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு டிசம்பர் 2013-ல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான திட்ட விளக்க அறிக்கை ஜனவரி 2014 அன்று இறுதி செய்யப்பட்டது.

தமிழக அரசு இத்திட்டத்திற்காக பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதியை 21.01.2014 அன்று அளித்தது. இத்திட்டத்திற்கான நிலங்களை ஆர்ஜிதப்படுத்த சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் 04.07.2014 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அணுகும். சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என்பதை டாக்டர் ராமதாசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.



POST 417/6/2014, 5:58 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மின் உற்பத்தி பெருக்கத் திட்டங்கள்:

ஆறாவதாக, 10,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் ராமதாசு.

முதல்-அமைச்சர் அம்மாவின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு வட சென்னை, மேட்டூர் மற்றும் வல்லூர் மின் திட்டங்களை விரைவுபடுத்தி 2500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டது. மேலும், கூடங்குளம் அணு மின் நிலைய முதலாவது அலகு முழு உற்பத்தி நிலை அடைந்ததன் மூலம் 562 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தமிழகத்திற்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

தற்போது நடந்து வரும் வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு, தூத்துக்குடியில் கூட்டு மின் திட்டம், நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் திட்டம் 2-வது அலகு திட்டங்களை விரைவுபடுத்தி 1429 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு இந்த நிதியாண்டிலேயே கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. ஆகமொத்தம், 2000 மெகாவாட் கூடுதல் நிறுவு திறன் இந்த நிதியாண்டில் (2014-15) உருவாக்கப்படும். அதாவது, முதல்-அமைச்சர் அம்மாவின் தலைமையிலான அரசு 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 4,500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பலன் படிப்படியாக தமிழகத்திற்கு கிடைக்க உள்ளது.

மேலும், மேற்கண்ட திட்டங்களை தவிர எண்ணூர் விரிவாக்கம், உடன்குடி அனல் மின் திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார திட்டம் என மொத்தம் 3300 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகளும் மின்வாரியத்தால் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 4000 மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் மின் திட்டப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளியும் இந்த ஆண்டிலேயே இறுதி செய்யப்பட்டு, அதன் பலனாக 1,600 மெகாவாட் அத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும்.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு 12730 மெகாவாட் மின்சாரம் இந்த அரசால் கூடுதலாக கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தமிழகத்தின் நீண்ட கால மின் தேவையை நிறைவேற்றும் வகையில் எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் (660 மெகாவாட்), உப்பூர் அனல் மின் திட்டம் (2800 மெகாவாட்) வட சென்னை அனல் மின் திட்டம் 3ம் நிலை (800 மெகாவாட்), உடன்குடி அனல்மின் திட்ட விரிவாக்கம் (2660 மெகாவாட்), தூத்துக்குடி அனல்மின் திட்டத்திற்கான மாற்று திட்டம் (2660 மெகாவாட்) என 5700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றிற்கான அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் பணிகள் துவக்கப்படும். இது மட்டுமல்லாமல், 2000 மெகாவாட் திறனுள்ள சில்லஹல்லா நீறேற்றும் மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி மற்றும் 500 மெகா வாட் திறனுள்ள குந்தா நீறேற்றும் மின் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக மொத்தத்தில், 18430 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கும் மற்றும் 2500 மெகாவாட் புனல் மின் உற்பத்திக்கும் இந்த அரசு வழிவகை செய்துள்ளது. இதிலிருந்து, முதல்-அமைச்சர் அம்மா மின் உற்பத்தியை பெருக்கு வதற்கான திட்டங்களை எவ்வாறு தீட்டி செயல்படுத்தி வருகிறார் என்பதை மருத்துவர் ராமதாசு இனியாவது புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்.



POST 517/6/2014, 5:59 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
செய்யூர் அனல் மின் திட்ட முன்னேற்றம்:

ஏழாவதாக, 4,000 மெகாவாட் திறன் கொண்ட செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியிருக்கிறார் மருத்துவர் ராமதாசு. இத்திட்டத்தை அமைப்பதற்காக கோஸ்ட்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற மத்திய அரசின் சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தவிர, இத்திட்டத்திற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசின் சிறப்பு நிறுவனம் தான் மைய அரசின் ஆணைக்கேற்ப செய்து வருகிறது.

இத்திட்டத்தை அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 30.09.2013 அன்று பெறப்பட்டது. மின் திட்டத்திற்கான தகுதியான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய 26.09.2013 முன் தகுதிக்கான வேண்டுகோள் படிவங்கள் கோரப்பட்டு, 20.11.13 அன்று திறக்கப்பட்டது. கருத்துருக்கான வேண்டுகோள் படிவத்தை ஐந்து தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் வாங்கியுள்ளனர்.

இப்பணிக்கான விலைப் புள்ளிகள் 22.09.2014 அன்று திறக்கப் படவுள்ளன. இத்திட்டத் திற்கான சுற்றுச்சூழல் மற்றும் நில ஆர்ஜிதம் சம்மந்தமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. தமிழக அரசைப் பொறுத்த வரையில், மாநில அரசின் பொறுப்பில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு, 1,100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.

சூரிய ஒளி மின்சாரம்:

எட்டாவதாக, சூரிய ஒளி மின்சாரம் ஒரு மெகாவாட்டாவது உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதா என்று வினவியுள்ள டாக்டர் இராமதாசு, இது குறித்து மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு அறிவித்த 2012 ஆம் ஆண்டு சூரிய மின்சார கொள்கையின் அடிப் படையில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திறந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரி இறுதி செய்து 708 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய இசைவு கடிதங்கள் வழங்கப்பட்டது.

மின்சார கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் விலை அனுமதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் ஒரு சில நுகர்வோர் அமைப்புகள், தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் விதிக்கப்பட்ட கட்டாய சூரிய மின்சக்தி கொள்முதல் குறித்த ஆணைக்கு எதிராக மேல்முறையீட்டு மின்சார தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சூரிய மின் சக்தித் திட்டங்களின் கீழ் 102 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஒரு மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கூட தமிழ்நாட்டில் நிறுவப்படவில்லை என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை.

இது மட்டுமல்லாமல், சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1 கிலோ வாட் சூரிய மேற்கூரை மின் நிலையம் அமைக்கும் வீட்டு உபயோக நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு அரசால் 20,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 1,346 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இதே போன்று, சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டு மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை அமைத்து, குடியிருப்போரின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 82,275 பசுமை வீடுகள் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ளன.

இது தவிர, சூரியசக்தி மூலம் தெருவிளக்குகளை மின்னூட்டுதல் திட்டத்தின் கீழ், இதுவரை 19,540 தெருவிளக்கு அமைப்புகள் எரிசக்தி திறனுள்ள 20 வாட் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளன.



POST 617/6/2014, 6:01 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
நீண்ட கால ஒப்பந்தம்:

ஒன்பதாவதாக, 3330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களை குறை கூறி பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாசு. மின் உற்பத்தித் திட்டங்களை பெருக்கி நிறைவேற்றுவது என்பது வேறு, உடனடி மற்றும் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுவதற்காக நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்வது என்பது வேறு என்பதை டாக்டர் ராமதாசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவேற்றுவதற்காக, 3330 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 3330 மெகவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்டால் சுமார் ரூபாய் 22000 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதுதவிர, சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிடவே இரண்டு ஆண்டுகள் ஆகும்.

மேலும், இத்திட்டங்களை நிறைவேற்ற ஐந்து ஆண்டு காலம் ஆகும். மேற்கண்ட கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டும், உடனடியாக மின்சாரம் கிடைப்பதற்காகவும் ஒப்பந்தங்கள் போடப்பட் டுள்ளன. மேலும், தமிழகத்தில் நிலக்கரி வளம் இல்லை என்பதாலும், ஏற்கெனவே இயங்கும் அனல் மின் நிலையங்களுக்கே நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாலும், புதிய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு கிடைக்காததால் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களில் ஏற்கெனவே நிலக்கரி ஒதுக்கீடு பெற்று நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தான் தமிழகத்தின் நீண்ட காலத் தேவையை நிறைவேற்றும் வழியாகும்.

இதுவே போதுமானது:

கடைசியாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மேற்கண்ட விளக்கங்களே போதுமானது என்பதை ராமதாசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது கேள்விகள் மூலம், மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கோரப்படுவது என்பது ஏதோ அரசு கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவது போன்றது என்ற தனது அறியாமையினை மருத்துவர் ராமதாசு வெளிப்படுத்தி உள்ளார். இந்த விளக்கத்தின் மூலம், அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றி ராமதாஸ் தெரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

ஒரு மின் திட்டத்தை துவக்குவதற்கு என்னென்ன அனுமதிகளை பெற வேண்டும், என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், யார் யாரிடமிருந்து அனுமதி பெற வேண்டும், நிலங்களை கையகப்படுத்தும் போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், சிந்தித்துப் பார்க்காமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற பழமொழிக்கேற்ப மனம் போன போக்கில் கேள்விகளை கேட்பதை டாக்டர் ராமதாசு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நிலவி வந்த பற்றாக்குறையை, மூன்றே ஆண்டுகளில் சீர் செய்து, மின் வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ள முதல்-அமைச்சர் அம்மாவின் சாதனையை பொது மக்களும், தொழில் முனைவோரும், விவசாய பெருங்குடி மக்களும் பாராட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமல், பொறாமையினால், ஆற்றாமையினால், ஆகையால், அரசியல் காழ்ப்பு ணர்ச்சியால் இதுபோன்ற அறிக்கைகளை வெளி யிடுவது அழகல்ல. பாராட்ட மனமில்லை என்றாலும், இதுபற்றி மேலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸை கேட்டுக் கொள்வதோடு, "பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்" என்ற வள்ளுவரின் வாக்கினை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.



POST 7

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT