RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு ஜெயலலிதாதான் முழு காரணம்: ராமதாஸ்

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 5:31 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக அறிக்கையைப் படித்தால் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் முழு காரணம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு ஜெயலலிதாதான் முழு காரணம்: ராமதாஸ் 13-ramadoss-pmk1-300

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றி அமைக்கப்பட்ட புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவ அதிகாரிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை சகித்துக் கொள்ள முடியாமல் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரும் கொதித்துப் போயிருக்கும் நிலையில், இப்பிரச்னையை ஏதோ தமக்கும், கருணாநிதிக்கும் இடையிலான மோதலைப் போன்று சித்தரிக்க முதலமைச்சர் முயற்சி செய்திருக்கிறார். இதன்மூலம் இப்பிரச்னையில் மற்றவர்கள் குரல் எழுப்புவதை தடுக்கலாம் என அவர் நினைக்கிறார். முதலமைச்சரின் இந்த எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. மருத்துவர்கள் நியமனம் குறித்த அறிவிக்கையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அம்சங்கள் இருந்தபோது, முதல்வருக்கே தெரியாமல் அதிகாரிகள் எவரேனும் இதை செய்திருக்கலாம் என்று தான் பலரும் கருதினர். ஆனால், இப்போது முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தது பிறகே சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா தான் என்ற உண்மையை உணர முடிகிறது.

எய்ம்ஸ் வழக்கு..

எய்ம்ஸ் பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகத் தான், அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார். உண்மையில் இது ஏற்கக் கூடியதல்ல. எய்ம்ஸ் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் ஜூலை 31 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு 22 பேராசிரியர்கள், 92 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 114 மருத்துவ அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி இடஒதுக்கீடு மறுக்கப்படவில்லை. மாறாக 22 பேராசிரியர் பணியிடங்களில் 6 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஓர் இடம் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது; அதேபோல் 92 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 24 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்டோருக்கும், 11 இடங்கள் பட்டியலினத்தவருக்கும், 3 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

எய்ம்ஸில் இடஒதுக்கீடு உண்டு

அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காரணமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்திலேயே இட ஒதுக்கீடு தொடர்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், இடஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, 148 உதவி மருத்துவ பேராசிரியர் பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் எய்ம்ஸ் நிறுவனம் நிரப்பியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களான எய்ம்சிலும், ஜிப்மரிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது, புதிதாக தொடங்கப்படும் அதி உயர் சிறப்பு மருத்துவமனையில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை.

இடஒதுக்கீடு பொருந்தும்

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமனம் செய்யும்போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். இதுவும் சொத்தை வாதம் ஆகும். உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் தான், கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி 911 உதவி அறுவை மருத்துவர்கள் (பொது),1163 உதவி அறுவை மருத்துவர்கள் (சிறப்பு), 54 உதவி பல் அறுவை மருத்துவர்கள் (பொது), 85 உதவி பல் அறுவை மருத்துவர்கள் (சிறப்பு) என மொத்தம் 2213 மருத்துவ அதிகாரிகளை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், மருத்துவர்கள் நியமனத்திற்கு நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகள் பொருந்தும் The rule of reservation is applicable as per the rules in force) என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே முதல்வரின் ஆட்சியில், ஒரே ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒப்பந்த பணி நியமனங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, திசம்பர் மாதத்தில் காணாமல் போனதன் பின்னணி என்ன? என்பதை ஜெயலலிதா தான் விளக்க வேண்டும்.

எய்ம்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்களாகியும் அது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத ஜெயலலிதா, இப்போது இட ஒதுக்கீடு வழங்குவதில் தாம் செய்த துரோகம் அம்பலமானதால், எய்ம்ஸ் வழக்கின் தீர்ப்பை துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பதுடன், மத்திய அரசில் அ.தி.மு.க. பங்கேற்ற பின்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்காத அவர் தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்கப்போவதாக கூறுவது, கூறை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போகப் போனக் கதையாகத் தான் உள்ளது.

சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு துரோகம் இழைக்கப்படுவதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து விட்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT