RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பாண்டிய நாடு - விமர்சனம்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 10:08 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கமான பழிவாங்கும் கதை என்று லேசாகச் சொல்லிவிட்டு செல்லமுடியாதபடி திரைக்கதை அமைந்துவிட்டது தான் படத்தின் சிறப்பம்சம்.

விஷால் மதுரையில் ஒரு செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்யும் சர்வீஸ் இன்ஜினியர். அவருடைய அண்ணன் அரசின் கனிமவளத்துறையில் அதிகாரி. அண்ணனது குடும்பம் மற்றும் அப்பா, அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். அவர்களது மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கும்கி லட்சுமி மேனன். ஸ்கூல் டீச்சரான அவரை காதலிக்கிறார் விஷால். இதுவரை கதை எளிமையான அழகான ஒரு காதல் கதையாகச் செல்கிறது. இணையாக இன்னொரு கதையும் செல்கிறது. அதுதான் 2012ல் பிரசித்தி பெற்ற பி.ஆர்.பியின் முப்பதாயிரம் கோடிரூபாய் கிரானைட் ஊழல் கதை.

மதுரையில் ஒரு பிரபல ரவுடி இறந்து போகவே அவரது சிஷ்யர்கள் இருவருக்கும் இடையே அடுத்த தாதா யார் என்பதில் போட்டி வருகிறது. ஒருவரையொருவர் கொல்வதற்கு அலைகிறார்கள். அதில் மத்தியஸ்தம் பேச வருபவர் இருவருக்குமிடையே ரியல் எஸ்டேட், சாராயக்கடை, வசூல், கிரானைட்ஸ், ஹோட்டல் என்று அவர்களின் தொழில்களை பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் என்று வழக்கமான முறையில் அட்வைஸ் பண்ண வருவார். அப்போது ரவி என்கிற அந்த தாதா சொல்வான் சாராயக்கடை, வசூல், ஹோட்டல் என்று எல்லா பிஸினெஸ்ஸையும் தூக்கிச் சாப்பிடும் கிரானைட்ஸ் தொழிலில் வரும் கொள்ளை லாபம் வருஷத்துக்கு முன்னூறு கோடி ரூபாய் என்பான். எனவே தொழில் போட்டி என்பது கிரானைட்ஸ் தொழிலை யார் அபகரிப்பது என்பதாக ஆகிறது. அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுவது இல்லாவிட்டால் ஆக்ஸிடெண்ட் போல திட்டமிட்டு காரில் மோதிக் கொல்வது, சட்டவிரோதமாக குறிப்பிட்ட ஆழத்துக்கும் மேல் தோண்டுவது போன்ற பி.ஆர்.பி விஷயங்கள் அப்படியே படத்தில் இருக்கின்றன.

பி.ஆர்.பி ஊழலில் துவங்கி, ஸ்பெக்டரம், கோல்கேட், தற்போதைய தாதுமணல் வரை எல்லா ஊழல்களிலும் அதை கண்டிக்கும், எதிர்க்கும் சாதாரண மக்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதும் அதை தடுத்துக் கேட்க ஆளின்றிப் போனதும், சட்டங்கள் மற்றும் காவல்துறை போன்றவை முப்பதாயிரம் கோடிகளுக்கு சலாம் போடுவதும், பிரதமர் கூட மென்று முழுங்கி பதில் சொல்வதுமான யதார்த்தத்தில் பாண்டிய நாடு நம் மனதில் பாண்டி ஆடிவிடுகிறது. படத்தில் அப்படிக் கொல்லப்படும் அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனின் மரணத்துக்காக அந்த சாதாரண நடுத்தர குடும்பம் எப்படி பழிக்குப் பழிவாங்க முயல்கிறது என்பதாகச் செல்கிறது இரண்டாம் பகுதிப் படம்.

சுசீந்திரனின் எழுத்தும் இயக்கமும் கூர்மையாகிக் கொண்டேதான் வருகின்றன. இப்படத்தில் கிரானைட்ஸை மையமாக வைத்ததில் அவரது தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். 1992ல் ஜெயலலிதா அரசு அரசின் வசமிருந்த கிரானைட் தோண்டும் உரிமையை உலகமயமாக்கலின் விளைவாக தனியாருக்கு லைசன்ஸ்களாக வழங்கியது. 2000ஆம் ஆண்டு துவங்கி கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு இயற்கைவளச் சுரண்டல் தான் கிரானைட்ஸ் தொழிலில் செய்யப்பட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை. இதில் மதுரையருகே மேலூரில் புகழ்பெற்ற யானைமலை என்கிற மலையையே இவர்கள் கிரானைட்ஸ் மலை என்பதையறிந்து அதையும் லவட்ட முயன்றபோதுதான் இத்தகைய கார்ப்பரேட் சைஸ் கொள்ளை கலெக்டர் தேவசகாயம் அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் பொது வெளிச்சத்துக்கு வந்தது. கருணாநிதியின் மகன் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறதென்று அதில் ஆதாரங்கள் காட்டப்பட்டிருந்தன. இப்போது அ.தி.மு.கவுக்கு இந்தக் கொள்ளையில் தன் பங்கைப் பெற நல்ல வாய்ப்பு. கோர்ட் மூலமாக இழுத்து மூடப்பட்டது கிரானைட் குவாரிகள். தற்போது பேரங்கள் படிந்திருக்கக்கூடும் எனவே பி.ஆர்.பி(P.R.P)க்கும் அவரது குடும்பத்திற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இனி கிரானைட்ஸ் கதை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதை போலவே ஆகும். சரி நம்ம பாண்டிய நாட்டுக்கு வருவோம்.

படத்தில் பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதம். பாரதிராஜா ஒரு நடுத்தர அப்பாவாக அசத்தியிருக்கிறார். தமிழ்ப் படங்களுக்கு அசத்தலான ஒரு புதிய அப்பா வரவு. வெல்கம் சார். ஸ்கூல் டீச்சராக வரும் லட்சுமி மேனன் கும்கியில் வந்த ஆதிவாசிப் பெண்ணா இவர் என்று கேட்கவைக்கிறார். விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்தச் சுட்டிப் பெண். தயாரித்து நடித்திருக்கும் விஷாலும் ஜமாய்த்திருக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் இதம் பிண்ணனி இசை் பலம். மதியின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்தை அதிகமாக்கியிருக்கிறது. சண்டைகள், டூயட்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகினாலும் அது படுசீரியசான இந்தக் கதையை நோக்கி பார்வையாளர்களை கட்டிப் போடவே பயன்பட்டிருக்கிறது. அதற்காக அதை மறந்துவிடலாம்.

படத்தின் பிற்பகுதியில் கிரானைட்ஸ் பெயரே வராததால் படம் கிரானைட்ஸ் கொள்ளை என்பதாக இல்லாமல் வெறும் தாதா பிரச்சனை போன்று மாறிவிடுகிறது. அதே போல இவ்வளவு பெரிய கொள்ளைகள் நடைபெறும் போது அதன் பின்புலத்தில் செய்லபடும் அரசியல் புளளிகளின் பங்கு பெரிதாக வெளிக்காட்டப்படவில்லை. மற்றபடி ஒவ்வொரு முறையும் தாதாக்கள் பாரதிராஜாவையும், விஷாலையும் நெருங்கும் போது நாம் பதறுகிறோம். அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

தாதாக்களையும், ரவுடிகளையும் அரசியல்வாதிகளையும் பொதுமக்களும் பழிவாங்கலாம் 'யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கமுடியாம செஞ்சா தாதாக்களை சாதாரண மக்களும் பழிவாங்கலாம்' என்கிற ஐடியாவை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் அநியாயங்களை எப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு எழும் தார்மீகக் கோபத்துக்கு ஒரு ஜனரஞ்சகமான வடிகாலை காட்டியிருக்கிறார் இயக்குனர். தீபாவளிப் படங்களிலேயே உருப்படியான படம் இதுதான் போலிருக்கிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT